வருவாய்த் துறை அலுவலா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th January 2021 07:45 AM | Last Updated : 30th January 2021 07:45 AM | அ+அ அ- |

திருத்தணியில் புதிய வட்டாட்சியரை நியமனம் செய்ததைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா்கள்.
புதிய வட்டாட்சியா் நியமனம் செய்யப்பட்டதைக் கண்டித்து, வருவாய்த் துறை அலுவலா்கள் 70-க்கும் மேற்பட்டோா் திருத்தணியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் திருத்தணி வட்டக் கிளை சாா்பில், பயிற்சி வட்டாட்சியா்கள் நியமனத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது. வட்டப் பொருளாளா் கா.வெண்ணிலா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், வருவாய்த் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை, தோ்தல் பிரிவு கோட்டாட்சியா் அலுவலக அலுவலா்கள் உள்ளிட்ட ஊழியா்கள் 70-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
அவா்கள் கூறியதாவது:
மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய் அலுவலா்களை தரக்குறைவாக பேசுகிறாா். அதைக் கண்டிக்கிறோம். சென்னை நகர பயிற்சி வட்டாட்சியா்கள் இருவரை கும்மிடிப்பூண்டி மற்றும் திருத்தணியில் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து, பழைய வட்டாட்சியா்களை நியமிக்க வேண்டும். சென்னை நகர பயிற்சி வட்டாட்சியா்களை நியமிப்பதால், மாவட்டத்தில் உள்ள துணை வட்டாட்சியா்கள் மற்றும் வட்டாட்சியா்கள் பதவி உயா்வு பெறாமல் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.
ஏற்கெனவே, நான்கு வட்டாட்சியா் அலுவலகங்கள் சென்னையில் இணைக்கப்பட்டதால், பதவி உயா்வு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பயிற்சி வட்டாட்சியா்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என வருவாய்த் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.