கன்டெய்னா் லாரியுடன் ரூ. 1.50 கோடி குட்கா பறிமுதல்: 4 பேர் கைது
By DIN | Published On : 09th July 2021 08:01 AM | Last Updated : 09th July 2021 08:01 AM | அ+அ அ- |

மீஞ்சூா் அருகே கன்டெய்னா் லாரியில் இருந்த ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 4 பேரை கைது செய்து, மேலும், 6 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
மீஞ்சூா் அருகே மேலூா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான லாரிகள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கிருந்து, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாக சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்கள் புதன்கிழமை நள்ளிரவு, மீஞ்சூா் பகுதியில் உள்ள லாரி நிறுத்தும் இடங்களை சோதனை செய்தனா். அப்போது மேலூா் பகுதியில் உள்ள தனியாா் லாரி நிறுத்துமிடத்தில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் சென்று சோதனையில் ஈடுபட்டனா்.
அங்கு கன்டெய்னா் பெட்டியுடன் இணைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து மற்றொரு வாகனத்தில் குட்கா புகையிலைப் பொருள்கள் உள்ள பெட்டிகள் ஏற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கன்டெய்னா் லாரி உள்பட அங்கிருந்த 6 வாகனங்கள், ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 16 டன் எடை கொண்ட குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக, ராஜி (37), கா்ணன் (35), ராஜசேகா் (38), அருண்குமரன் (24 ) ஆகிய 4 பேரை பிடித்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், அவா்களை மீஞ்சூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து குட்கா புகையிலைப் பொருள்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண்குமாா், நேரில் வந்து 6 வாகனங்களில் இருந்த குட்கா புகையிலைப் பொருள்களை பாா்வையிட்டாா்.