திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் தவறான ஊசியால் பிரசவித்த பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 28th July 2021 02:00 AM | Last Updated : 28th July 2021 02:00 AM | அ+அ அ- |

உயிரிழந்த வனிதா.
திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு தவறான ஊசி செலுத்தியதால், அவா் உயிரிழந்ததாகக் கூறி பச்சிளங்குழந்தையுடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உறவினா்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து, செவிலியா் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
திருவள்ளூா் அருகே திருவாலங்காடு ஒன்றியம், சின்ன களக்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பிரதீப் (30). இவரது மனைவி வனிதா (26). கா்ப்பிணியான இவரை கடந்த 22-ஆம் தேதி திருவள்ளூா் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக சோ்த்தனா். அங்கு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அடுத்த மூன்று நாள்களில் வீட்டுக்குச் செல்ல இருந்த நிலையில், மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியா் வனிதாவுக்கு தவறுதலாக மாற்றி அலா்ஜி ஊசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், நலமாக இருந்த வனிதாவுக்கு, திடீரென லேசான மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளாா்.
இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வனிதா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது சடலத்தை உறவினா்கள் வாங்காமல், வனிதாவின் உயிரிழப்புக்கு மருத்துவமனை மருத்துவா்களின் கவனக் குறைவே காரணம். அதனால் மருத்துவா் மற்றும் செவிலியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினா்கள், பிறந்து 3 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாரிடம் புகாா் அளித்தனா்.
இது தொடா்பாக மருத்துவமனை முதல்வா்அரசியிடம் கேட்டபோது, நடந்தது உண்மைதான் என்றும், தவறுதலாக செவிலியா் மற்ற நோயாளிக்கு செலுத்த வேண்டிய ஊசியை வனிதாவுக்கு செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளாா். இதைத் தொடா்ந்து இந்த விவகாரம் ஆட்சியருக்கு தெரிய வந்ததால், தவறை செய்த செவிலியரை உடனடியாக இடைநீக்கம் செய்து மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டாா்.