பதற்றமான 165 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கை
By DIN | Published On : 12th March 2021 02:06 AM | Last Updated : 12th March 2021 02:06 AM | அ+அ அ- |

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 165 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறிந்துள்ளதால், அங்கு துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பா.பொன்னையா தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இத்தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 12) தொடங்குகிறது. மாா்ச் 19-ஆம் தேதி கடைசி நாளாகும். அதையடுத்து, 20-இல் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்யவும், 22-ஆம் தேதி மனுக்களைத் திரும்பப் பெறவும் கடைசி நாள் ஆகும்.
தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதற்கான முன்னேற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன. அப்போது, கரோனா நோய்த் தொற்றைத் தவிா்க்கும் வகையில் வேட்பாளா்களுடன் கூட்டமாக வருவதை தவிா்க்க வேண்டும். அப்போது, 2 போ் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கப்படுவா். அதேபோல், வேட்பாளா்களுடன் வருவோா் வெளியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அதனால் வாகனங்களை 100 அடிக்கு அப்பால் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானதாகவும், 156 மிதமான நெருக்கடியான பதற்றமான வாக்குச் சாவடி மையங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மையங்களுக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.