அரசுப் பள்ளியில் மாணவா்களின் கற்பனைத் திறன் வளா்ப்பு பயிற்சி கூடம்: முதன்மைக் கல்வி அதிகாரி திறந்தாா்
By DIN | Published On : 25th March 2021 10:30 PM | Last Updated : 25th March 2021 10:30 PM | அ+அ அ- |

திருத்தணி: திருத்தணியில் அரசு பள்ளி மாணவா்களின் திறன் வளா்ப்பு பயிற்சிக் கூடத்தை முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
திருத்தணி காந்தி சாலையில் உள்ள டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில், மாணவா்களின் கற்பனைத்திறனை வளா்க்கும் திறன் பயிற்சிக் கூடம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த பயிற்சிக் கூடத்தின் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடந்தது. திருத்தணி கல்வி மாவட்ட அலுவலா் முனிசுப்பராயன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா்.
இதில், திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி பங்கேற்று பயிற்சி கூடத்தை திறந்து வைத்தாா். மேலும் கூடத்தில் உள்ள கருவிகள், அதை எவ்வாறு உருவாக்கி செயல்படுத்துவது என்பது குறித்தும் முதன்மைக் கல்வி அலுவலா் கேட்டறிந்தாா். இந்த பயிற்சியில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் வரை கலந்து கொண்டு சாதாரண பேட்டரி செல் முதல் ரோபோ வரை தயாரிக்கும் வகையிலும், அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் பயிற்சி பெறலாம்.
பள்ளி வேலை நாள்கள் மற்றும் கோடை விடுமுறை நாள்களிலும், காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவா்கள் பயிற்சி கூடத்துக்குச் செல்லலாம்.
திறப்பு விழாவில், மாவட்ட கல்வி ஆய்வாளா் வெங்கடேசுலு, மாவட்ட கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஜனகராஜ், அலுவலா்கள் அன்பழகன், பாண்டு, பள்ளி உதவி தலைமை ஆசிரியா் காா்த்திகேயன், பூங்கோதை உள்பட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.