திண்டுக்கல் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.
திண்டுக்கல் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

தனியார் செவிலியர் கல்லூரி தாளாளர் மீது பாலியல் புகார்:  திண்டுக்கல் அருகே 200 மாணவிகள் போராட்டம்

தனியார் செவிலியர் கல்லூரி தாளாளர் மீது பாலியல் புகார் கூறி 200க்கும் மேற்பட்ட மாணவிகள் திண்டுக்கல் பழனிச் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் செவிலியர் கல்லூரி தாளாளர் மீது பாலியல் புகார் கூறி 200க்கும் மேற்பட்ட மாணவிகள் திண்டுக்கல் பழனிச் சாலையில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் பி.ஜோதிமுருகன். இவர், திண்டுக்கல் பழனிச் சாலையிலுள்ள முத்தனம்பட்டி பகுதியில் செவிலியர் கல்லூரி மற்றும் கேட்ரிங்க கல்லூரி நடத்தி வருகிறார். அந்த கல்லூரியில் திண்டுக்கல் மட்டுமின்றி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி தாளாளரான ஜோதிமுருகன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்தனம்பட்டி அழகுப்பட்டி சாலையில் முதல் கட்டமாக மறியலைத் தொடங்கிய மாணவிகள், பின்னர் திண்டுக்கல் பழனி பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
 
விடுதி காப்பாளர் கைது: மாணவிகள் தரப்பில் 1098க்கு பாலியல் பிரச்னை குறித்து வெள்ளிக்கிழமை காலை 100க்கும்  மேற்பட்ட அழைப்புகள் சென்ற நிலையில் திடீரென மறியல் போராட்டம் தொடங்கியது. தகவல் அறிந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன், காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரி தாளாளரான ஜோதிமுருகன் தலைமறைவானதை அடுத்து, விடுதி காப்பாளர் அர்ச்சணா என்பவரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர். மேலும், ஜோதிமுருகனின் தந்தை பழனிச்சாமி  உள்ளிட்ட  அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜோதிமுருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஜோதி முருகன், அமமுக சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத்  தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி  வாய்ப்பை இழந்தார். மேலும்,  பல்வேறு விளையாட்டுச் சங்கங்களிலும் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். இவர் மீது கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து மாணவிகள் நடத்திய போராட்டம்  திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாணவிகள் சிலர் கூறியதாவது: விடுதி காப்பாளரும், பேராசிரியையுமான அர்ச்சணா, மாணவிகளுக்கு மூளை சலவை செய்து வெளியிடத் தங்கலுக்கு காரில் அனுப்பி வைப்பார். புறநகர் பகுதிகளில் உள்ள ஜோதிமுருகனின் மற்றொரு கல்லூரிக்கு அழைத்துச் சென்று நள்ளிரவு வரை கேளிக்கைகளில் ஈடுபடுத்துவர். இதுபோன்று வெளியிடத் தங்கலுக்கு செல்லும் மாணவிகளுக்கு, கூடுதல் மதிப்பெண் அளிப்பதாகவும், மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகவும், சினிமா துறையில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகவும் தெரிவித்தனர். இதில் ஏராளமான மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஜோதிமுருகனின் கல்லூரியில் விழிப்புணர்வு மற்றும் நேரடி புகார் அளிப்பதற்கான முகாம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில், காவல் துறை, கல்வித்துறை, கோட்டாட்சியர், சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட 18 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சி முடிந்த 5 நாள்களில் இந்த பாலியல் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com