ஆவடி, பூந்தமல்லியில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு
By DIN | Published On : 28th November 2021 06:21 PM | Last Updated : 28th November 2021 06:22 PM | அ+அ அ- |

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு நகராட்சிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டதோடு, இனிமேல் மழைநீர் தேங்காத வகையில் எளிதாக கடந்து செல்லும் வகையில் நிரந்தர திட்டம் வகுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாள்களாக கனமழை அதிகம் பெய்ததால் சென்னை மற்றும் புகர் மாவட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் புகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல், திருவேற்காடு, பூந்தமல்லி, அம்பத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகள் மழை புகுந்தது. அதேபோல் தெரு மற்றும் சாலைகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இதில் ஆவடி மாநகராட்சி பகுதியில் நேற்று (சனிக்கிழமை) அதிகபட்சமாக 199 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்த காரணத்தால் காணும் இடங்கள் எல்லாம் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.
எனவே இதையறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியில் வெள்ளம் சூழ்ந்த இடங்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்று பார்வையிட்டு ஆய்வு செயதார். அப்போது, வேலப்பஞ்சாவடி, பத்மாவதி நகரில் மழை வெள்ளத்தில் நடந்து சென்றார். பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமையும் பார்வையிட்டு, மழையால் பாதித்து அப்பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் தங்க வைத்துள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து தேவையான நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.
அதையடுத்து ஆவடி மாநகராட்சியில் ராம்நகர் தேங்கியுள்ள மழை நீரை ராட்சச மோட்டார் மூலம் வெளியேற்றுவதை பார்த்தார். மேலும், கூடுதலாக மோட்டார் பொருத்தி நீரை கால்வாய்கள் மூலம் வெளியேற்றவும் அறிவுரை வழங்கினார். பின்னர் திருமுல்லைவாயல், கணபதி நகர், பூந்தமல்லி நகராட்சி அம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளிலும் சென்று பார்வையிட்டார். அதோடு, தேங்கிய மழைநீரை தெருக்கள் பாதிக்காமல் கால்வாய்கள் வழியாக வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். அப்போது, உடன் சென்ற பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் உடன் சென்று வெள்ள பாதிப்பு பகுதிகளில் நீரை அகற்றவும், பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும், மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிப்பு மற்றும் எந்தளவுக்கு வீடுகள் சேதம் அடைந்துள்ளதை நேரில் பார்வையிட்டு விவரங்களை அதிகாரிகள் அளிக்கவும் வேண்டும். எக்காரணம் கொண்டும் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்காத நிலையேற்பட்டு விடக்கூடாது. அதேபோல், இனி வருங்காலங்களில் ஆவடி, திருவேற்காடு, திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தரமாக தீர்வு காணும் நோக்கத்தில் விரிவான திட்டம் வகுக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அப்போது, மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.