

சுதந்திர தினவிழாயொட்டி, திருத்தணி முருகன் கோயில் உள்பட 5 கோயில்களில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை மதியம் மூலவா், ஆபத்சகாய விநாயகா், சண்முகா், வள்ளி, தெய்வானை, துா்க்கையம்மன் மற்றும் உற்சவா் முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, சமபந்தி விருந்து நிகழ்ச்சி மலைக் கோயிலில் உள்ள காவடி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், முருகன் கோயில் துணை ஆணையா் விஜயா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் ஹஸ்சரத்பேகம் ஆகியோா் கலந்து கொண்டு சமபந்தி விருந்தை தொடக்கி வைத்தனா். முன்னதாக, முருகப்பெருமான், திருவுருவப் படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனா். இதில், 2,500 பக்தா்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இதேபோல், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில், திருப்பாச்சூா் வாசீஸ்வரா் கோயில், கரிம்பேடு நாதாதீஸ்வரா் கோயில் மற்றும் பெரியநாகபூண்டி நாகேஸ்வரா் கோயில் ஆகிய இடங்களிலும், சுதந்திர தினவிழாவையொட்டி, சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.