திருவள்ளூர் அருகே மின்வாரிய அலுவலகம் சூறை: மின்வாரிய பணியாளர் மீது தாக்குதல்
By DIN | Published On : 21st April 2022 11:54 AM | Last Updated : 21st April 2022 11:54 AM | அ+அ அ- |

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சுற்று வட்டார பகுதிகளில் எவ்விதமான முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்விநியோகம் தடை செய்வதால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மின்வாரிய அலுவலகத்திற்குள் புகுந்து மின்வாரிய பணியாளரை தாக்கியதோடு மேசை, நாற்காலிகளையும் சூறையாடிய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போதைய நிலையில் கோடைக்காலம் என்பதால் வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு இரவுநேரங்களில் வெக்கையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியும் வருகின்றனர். இதேபோல் திருவள்ளூர் அருகே மணவாளநகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வந்தது.
இதனால் வீடுகளுக்குள் வெக்கையால் தூங்க முடியாமல் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அவதிக்குள்ளாகியும் வருகின்றனர்.
இதேபோல், புதன்கிழமை இரவும் அடிக்கடி மின் தடை செய்யப்பட்டது. இதையடுத்து மணவாளநகர் பகுதியில் மின்வாரிய பணியாளர் குப்பன் மின்மாற்றியில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது மணவாளநகர் துணை மின் நிலைய அலுவலகத்திற்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதை ஏன் உடனே சீரமைக்கவில்லை என கேட்டு அங்கிருந்த பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் அலுவலகத்தில் இருந்த கணிப்பொறி, நாற்காலி ஆகியவைகளையும் சூறையாடினர். இதில் ஒருவர் அங்கிருந்த இரும்பு கம்பியால் குப்பனின் தலையில் தாக்கியதால் கீழே சரிந்து விழந்தார். இதையடுத்து அங்கு பணியில் இருந்த மற்றவர்கள் குப்பனை காயத்துடன் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து குப்பன் மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்து 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.