ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ரூ.39.50 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 23rd August 2022 12:23 PM | Last Updated : 23rd August 2022 12:23 PM | அ+அ அ- |

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ஆவணமின்றி ஆந்திர மாநில சொகுசு பேருந்தில் கொண்டுவரப்பட்ட ரூ.39.50 லட்சத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அதே பேருந்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக-ஆந்திர எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்து தமிழக வரும் அனைத்து வாகனங்களிலும் கஞ்சா பொருள்களை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் ஆய்வாளர் தேவிகா தலைமையிலான போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த சொகுசு பேருந்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் பயணம் செய்த திருப்பதி பகுதியைச் சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.39.50 லட்சம் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருப்பதி காந்தி ரோடு பகுதியில் செல்லிடப்பேசி உதிரி பாகம் விற்கும் கடை நடத்தி வருவதாகவும், நண்பர்களிடமிருந்து கடன் பெற்று பணத்தை சென்னையில் செல்லிடப்பேசி உதிரிபாகம் வாங்க கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: கனியாமூர் பள்ளி திறப்பு: ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆனால், ஆவணமின்றி கொண்டு வந்த அத்தகைய பணத்தை காவல் துறையினரிடமிருந்து பறிமுதல் செய்து வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து ஆந்திராவில் இருந்து வந்த அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 2 கிலோ கஞ்சா பொருள்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.