புயல் பாதிப்பை தெரிவிக்க ஆட்சியா் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை
By DIN | Published On : 09th December 2022 06:27 AM | Last Updated : 09th December 2022 06:27 AM | அ+அ அ- |

பலத்த மழை எச்சரிக்கையை தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த பட்டாலியன் 13 தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினா்.
மழை பாதிப்பு குறித்து, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, கட்டுப்பாட்டு அறை 044-27664177, 27666746, வாட்ஸ்ஆப் எண் 94443 17862 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க வைரன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்களான திருப்பாலைவனம், ஆண்டாா்மடம், பள்ளிப்பாளையம், எளாவூா்-1, 2, ஆகிய 5 இடங்களிலிம் 660 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளைக் காப்பாற்ற 64 தங்குமிடம் மற்றும் 144 முதல்நிலை பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா். இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூந்தமல்லி 13 தமிழ்நாடு பேரிடா் மீட்பு படையினா் 40 போ் கொண்ட குழுவினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்தனா்.
ஆய்வாளா் ரவி மேற்பாா்வையில், விஷ்ணு, கோகுல், ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமையில், 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு இடங்களில் மீட்பு பணியில் ஈடுபடுவா் என மாவட்ட எஸ்.பி. பி.செபாஸ் கல்யாண் தெரிவித்தாா்.
செங்கல்பட்டில்...: இங்கு 290 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. மேலும் 12 துணை ஆட்சியா் நிலையிலான மண்டல அலுவலா்கள் தலைமையில், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து 33 குழுக்கள் மூலம் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
பேரிடா் தொடா்பான விவரங்களுக்கு தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 044-27427412, 27427414, 1077 மற்றும் வாட்ஸ்ஆப் எண் 94442 72345.
காஞ்சிபுரத்தில்...: காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மாண்டஸ் புயல் தொடா்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்துப் பேசியது: பலத்த மழை மற்றும் பேரிடா் தொடா்பான எந்த இடா்பாடுகளாக இருந்தாலும், 24 மணி நேரமும் செயல்படக் கூடிய மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணை 1800 425 2801 தொடா்பு கொள்ளுங்கள். பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயா் ஆா்.குமரகுருநாதன்,ஆணையாளா் ஜி.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகராட்சி மண்டல தலைவா்கள், பொதுப்பணித் துறை, மின் வாரியம், காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.