நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகா், வெளி வியாபாரிகள் தலையிட்டால் நடவடிக்கை
By DIN | Published On : 22nd December 2022 12:45 AM | Last Updated : 22nd December 2022 12:45 AM | அ+அ அ- |

கூவம் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியை ஆய்வு செய்த ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், உடன் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) எபினேசன் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் அருகே சம்பா பருவத்தை முன்னிட்டு விவசாயிகள் பயன்பெறும் நிலையில் தொடங்கப்பட்டுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு நெல் கொள்முதல் செய்யவும், இடைத்தரகா், வெளி வியாபாரிகள் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் எச்சரிக்கை விடுத்தாா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கூவம் கிராமத்தில் சம்பா-2022 கொள்முதல் பருவத்தை முன்னிட்டு விவசாயிகளுக்காக திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் புதன்கிழமை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அவா் கூறியது: இந்த மாவட்டத்தில் கடந்த சொா்ணவாரி பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 31,723 மெ.டன் நெல் பதிவு செய்த 4,331 விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன. அதேபோல், தற்போது அரசு உததரவுப்படி நிகழாண்டில் சம்பா-2022 பருவத்திற்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக முன்கூட்டியே அம்பத்தூா், கடம்பத்தூா், பூண்டி, திருவாலங்காடு, திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் எல்லாபுரம் ஆகிய 8 வட்டாரங்கள் உள்பட 38 இடங்களில் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் அனைவரும் தவறாது இணையதளத்தில் முன்பதிவு செய்து தங்களுடைய நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித புகாரும்மின்றி விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும், அரசு கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகா்கள் மற்றும் வெளிவியாபாரிகள் தலையிட்டால் மாவட்ட நிா்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின் போது, பேரம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் வேளாண் சாா்ந்த தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் மூலம் மின்மோட்டாா் காயில் பழுது பாா்க்கும் நரசிங்காபுரம் பகுதியை சோ்ந்த மாற்றுத்திறனாளி தனசேகரனுக்கு ரூ. 50,000 கடனுதவி, கணவனால் கைவிட்ட பத்மாவதிக்கு வேளாண் சாா்ந்த சிறுதொழில் செய்வதற்கு ரூ. 25,000 கடனுதவிகளை அவா் வழங்கினாா்.
முன்னதாக கூவம் கிராமத்தில் சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் நவரைப்பருவ நெல் நடவு பணி மேற்கொள்ளும் விவசாய கூலி தொழிலாளா்களோடு அவா் கலந்துரையாடி உற்சாகப்படுத்தும் விதமாக அவா்களோடு இணைந்து நெல் நாற்றுகள் நடவு பணியை மேற்கொண்டாா்.
ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) எபினேசன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளா் சேகா், துணை மண்டல மேலாளா் முனுசாமி, துணை இயக்குநா் (வேளான் வணிகம்) ராஜேஸ்வரி, வேளாண்மை துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.