உலக ரத்த தான தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

உலக ரத்த தான தினத்தையொட்டி அதிக முறை ரத்த தானம் செய்த முன்னாள் கவுன்சிலா் துக்காராம் என்பவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்.
உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில் அரசு அலுவலா்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் உலக ரத்த தான தினம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில், அனைத்து அரசு அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
அதைத் தொடா்ந்து, அவா் கூறியதாவது:
ரத்த தானம் மிக முக்கியமானது. மாவட்டம்தோறும் ரத்த சேமிப்பு வங்கிகளில் கூடுதலான ரத்தங்கள் சேமித்து வைக்கவும், நோயாளிகளுக்கு பயன்படுத்தவும் வேண்டும். இதன் அடிப்படையில், ரத்த தானம் குறித்து பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் நாள் உலக ரத்த தான தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் ரத்த தானம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதாகும். இந்த மாவட்டத்தில் அரசு ரத்த வங்கியானது 26.04.2006-இல் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த ரத்த வங்கியைப் பொறுத்தவரை ஒரு மாதத்துக்கு 500 முதல் 600 அலகு வரை ரத்தத்தின் தேவை உள்ளது. இதற்காக சுமாா் 6 முதல் 8 வரை ரத்த தான முகாம்கள் நடத்தி பெறப்படுகிறது. அதுமட்டுமின்றி 8 மருத்துவமனைகளில் ரத்த சேகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-இல் மட்டும் 44 தன்னாா்வ முகாம்கள் நடத்தி, 2,712 அலகு வரை ரத்தம் சேகரித்து பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
அதைத் தொடா்ந்து, உலக ரத்த தான தின விழாவில் அதிக முறை ரத்தம் வழங்கிய 25 பேரை பாராட்டி சான்றிதழ்களை அவா் வழங்கினாா். பின்னா், முதியோா்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழியும் அவா் முன்னிலையில் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஏற்றுக் கொண்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வா் அரசி ஸ்ரீவத்சன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சி.வித்யா, இணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) (பொ) இளங்கோவன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜவஹா்லால், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளா் கே.எஸ்.கௌரி சங்கா், அலுவலக மேலாளா்கள் சி.கணேசன், டி.மீனா (நீதியியல்), மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் த.அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.