திருவள்ளூரில் முதன் முதலாக புத்தக கண்காட்சி: ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமாக கொண்டு திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலாவது புத்தக கண்காட்சியானது
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவிற்கான விளம்பர பதாகையை வெளியிட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவிற்கான விளம்பர பதாகையை வெளியிட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.

திருவள்ளூர்: குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமாக கொண்டு திருவள்ளூர் மாவட்ட அளவில் முதலாவது புத்தக கண்காட்சியானது ஏப்.1-இல் தொடங்கி, தொடர்ந்து 11-ஆம் தேதி வரையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தற்போதைய நிலையில் பல்வேறு காரணங்களால் புத்தகம் வாங்குவதும், வாசிப்பு பழக்கமும் குறைந்துள்ளது. இதைத் கருத்திற் கொண்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். 

தற்போதைய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் அண்மையில் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் முதன் முறையாக புத்தக கண்காட்சி ஏப்ரல் 1 ஆம் தேதி  தொடங்கி, தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி வரையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்களுக்கு அதிகளவில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதே நோக்கமாகும். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். அதுமட்டுமின்றி நாள்தோறும் மாலை நேரங்களில் தமிழ் பண்பாட்டை சேர்ந்த பேச்சாளர்கள் சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ப ரூ.10 முதல் ரூ.1000-ம் வரை மதிப்பிலான புத்தகங்கள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும். இதற்கு நமக்கு உதவி செய்வதற்காக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

இங்கு விற்பனை செய்யப்படும் புத்தகங்களுக்கு 10 சதவிதம் வரையில் தள்ளுபடியும் வழங்கப்படும். அதேபோல், ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால், இந்த புத்தக கண்காட்சியில் அனைவரும் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அப்போது, இந்த நிகழ்ச்சி மூலம் மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியதர்ஷிணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com