சோராஞ்சேரியில் இரு கோயில் குளங்கள் சீரமைப்பு
By DIN | Published On : 19th October 2022 02:58 AM | Last Updated : 19th October 2022 02:58 AM | அ+அ அ- |

ஆவடி அருகே சோராஞ்சேரி ஊராட்சியில் இரு கோயில் குளங்கள் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
ஆவடி அருகே சோராஞ்சேரி ஊராட்சியில் திரெளபதி அம்மன் மற்றும் சிவன் கோயிலுக்குச் சொந்தமான இரு குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் பராமரிப்பு இன்றி குப்பைகள் குவிந்து, பாசி படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்து வந்தது. மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்த குளங்களை சீரமைத்து தூர்வார வேண்டும் என சோராஞ்சேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக சோராஞ்சேரி ஊராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சுழற்சங்கம் ஆகியவை இணைந்து இரு குளங்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை செய்து வந்தன.
இந்தப் பணிகளில் குளங்கள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும், மழைக் காலங்களில் இரு குளங்களிலும் தண்ணீர் வந்து தேங்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. குளங்களை சுற்றி மரக்கன்றுகள், பூச்செடிகள் நடப்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் பசுமை பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்ட இரு குளங்களையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சோராஞ்சேரி ஊராட்சித் தலைவர் சுகுமார், துணைத் தலைவர் பாபு, ஒன்றியக் குழு உறுப்பினர் பத்மாவதி கண்ணன், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சுழற்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.