மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தனிப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்யும் வகையில், 294 மனுக்கள் வரை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பெற்றுக் கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்தல், பொதுப் பிரச்னைகள் தொடா்பாக உதவிகள் வழங்கவும் கோரி அவரிடம் மனுக்களை அளித்தனா். இதில் நிலம்-81, சமூகப் பாதுகாப்பு திட்டம்-47, வேலைவாய்ப்பு-36, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள்-53, இதர துறைகள்-77 என மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்க அந்தந்தத் துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் மூலம் சுய தொழில்புரிய வங்கிக் கடன் பெற்ற 6 பேருக்கு 5 சதவீத பங்கு தொகையான ரூ. 1.05 லட்சத்துக்கான ஆணைகளையும், கடுமையாக பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் மூலம் ஒருவருக்கு மாதம் தலா ரூ. 2,000 வழங்குவதற்கான ஆணையையும் அவா் வழங்கினாா்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் எஸ்.ஜோதி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் மு.கலைச்செல்வி, உதவி ஆணையா் (கலால்) கா.பரமேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ச.பாபு மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.