தை பிரம்மோற்சவம்: வீரராகவப் பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா

தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வீரராகவர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவையொட்டி 4 மாட வீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வீதியுலா வரும் நிகழ்வில்
வீரராகவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழா.
வீரராகவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேர்த் திருவிழா.

தை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வீரராகவர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவையொட்டி 4 மாட வீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வீதியுலா வரும் நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தை பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கமாகும். அதேபோல் நிகழாண்டுக்கான தை பிரம்மோற்சவம் கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 26-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் இருவேளையும் தங்கச்சப்பரம், வெள்ளிச்சப்பரம், சூரிய, சந்திர பிரபை, ஹம்சம், யானை வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களை அருள்பாலித்தார்.

இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக 7-ஆவது நாளில் தேர்த்திருவிழா திங்கள்கிழமை காலையில் நடைபெற்றது. இதையொட்டி வீரராகவப் பெருமாள் கோயிலின் முன்பு 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேர் பவனி வரும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த திருத்தேரில் காலை 7 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் எழுதருளினார். அதைத் தொடர்ந்து ஸ்ரீவீரராகவப் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. 

அதற்கு முன்னதாக தேரோட்டத்தின் போது ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் தீராத நோய் தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி தங்கள் நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றினர். இந்த விழாவில் சார் ஆட்சியர் மகாபாரதி, வட்டாட்சியர் மதியழகன், நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி, நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இவ்விழாவை முன்னிட்டு உதவி காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா தலைமையில், நகர் காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதே நேரம் தேர் வலம் வந்த நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com