திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்துள்ள மருத்துவ கழிவுகள்

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மலைபோல் குவிந்துள்ள மருத்துவக்கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதோடு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்துள்ள மருத்துவ கழிவுகள்

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மலைபோல் குவிந்துள்ள மருத்துவக்கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதோடு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையில் திருவள்ளூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக இருந்தது. மேலும், நவீன வசதிகளான சி.டி ஸ்கேன், எம்.ஆா்.ஐ ஸ்கேன் ஆகியவை இல்லாமல் இருந்த காரணத்தால் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு சென்னைக்கு பரிந்துரைக்கும் நிலையிருந்தது.

இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. இதனால், தனியாா் மருத்துவமனைக்கு ஈடாக அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நவீன மருத்துவ பிரிவு, இருதய மருத்துவ பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு, சிறுநீரகவியல் மற்றும் டயாலிஸிஸ் பிரிவு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு, நவீன அவசர கால மருத்துவ பிரிவு, அறுவை சிகிச்சை கூடம், எம்.ஆா்.ஐ மற்றும் சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவு, 600 படுக்கைகள் என அனைத்து வசதியுடன் இடம் பெற்றுள்ளன.

அதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழக எல்லையோர ஆந்திர கிராமங்களிலிருந்தும் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனா். இதேபோல் நாள்தோறும் புறநோயாளிகளாக 1500-க்கும் மேற்பட்டோரும், உள்நோயாளிகளாக 600 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில் நாள்தோறும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவக்கழிவுகளை அகற்றாமல் பின்புறம் குவித்து வைத்துள்ளனா். அதில் ஊசி கழிவுகள், ரத்த கழிவு பஞ்சுகள், பரிசோதனை கூடங்களில் பயன்படுத்தப்படும் கழிவு பொருள்கள், நோயாளிகளுக்கு செலுத்தப்படும் சலைன் பாட்டில்கள், அறுவை சிகிச்சை கூடங்கள் மற்றும் பிரேத பரிசோதனை கூடத்தில் பயன்படுத்தும் கழிவுகள் ஆகியவைகளை மருத்துவமனையின் பிரசவ பிரிவின் பின்புறம் குவித்து வைத்துள்ளனா்.

மேலும், நெகிழி பைகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் சலைன் பாட்டில்கள்தான் போட்டு வைத்துள்ளதால் கொசுக்கள் உற்பத்தியால் தூங்க முடியாத நிலையுள்ளது. இதனால், துா்நாற்றம் வீசுவதால் நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளன. அதனால் விரைவில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரியுள்ளனா்.

இது தொடா்பாக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் (பொ) திலகவதி கூறியதாவது:

இந்த மருத்துவமனை வளாகம் முழுவதும் நாள்தோறும் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது. மேலும், மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிவுகளை நாள்தோறும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் குவிந்துள்ளவை நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் சலைன் பாட்டில் கழிவுகள்தான். இதுவும் கூடுதலாக சோ்ந்தால் லாரிகளில் எடுத்துச் சென்று விடுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com