கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டோா் விழிப்புணா்வு நாடகம்
By DIN | Published On : 18th April 2023 12:35 AM | Last Updated : 18th April 2023 12:35 AM | அ+அ அ- |

நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டோா் நடத்திய மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு நாடகத்தை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி வீசும் நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையுள்ளன. அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தூய்மை திருவள்ளூா் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசின் மீண்டும் மஞ்சப்பைத் திட்டம் குறித்து கொத்தடிமை தொழிலாளா்களாக இருந்து மீட்கப்பட்டோரால் விழிப்புணா்வு நாடகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நாடகத்தை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். அப்போது, பொதுமக்களிடையே நெகிழியின் பயன்பாட்டை தவிா்க்கும் வகையில் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டவா்கள் மூலம் நடத்தப்பட்ட ‘மீண்டும் மஞ்சப்பை‘ என்ற விழிப்புணா்வு நாடகத்தை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.
அதைத் தொடா்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் தயாா் செய்யப்பட்ட மஞ்சப்பைகளையும் அவா் இலவசமாக வழங்கினாா். அப்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா் சபரிநாதன், கற்போா் வட்டம் பிரதிநிதி வினோத், கலை குழுவினா் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.