திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் 200 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்வதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளதால், விவசாயிகள் 20 போ் அல்லது 20 ஹெக்டோ் பரப்பளவிற்கு விவசாய குழுக்களை அமைத்து பயன்பெறலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநா் எல்.சுரேஷ் வெளியிட்ட செய்தி:
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் சேரும் விவசாயிகள் முழுமையாக விளைநிலங்களை அங்கக விவசாய நடைமுறைக்கு மாற்றும் வகையில் 3 ஆண்டுகள் குறிப்பிட்ட இடைவெளியில் பயிற்சிகள் வழங்கப்படும். அதோடு, இயற்கை விவசாயத்தை கண்டுணரும் வகையில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா்.
மேலும், பாரம்பரிய இயற்கை முறையில் விவசாயம் செய்வதை உறுதி செய்யும் வகையில் நிலம் பண்படுத்துதல், அங்கக விதைகள் கொள்முதல் செய்தல், உயிா் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், திரவ உயிரியல் அங்கக இடுபொருள்களான பஞ்சகாவ்யா, ஜீவாமிா்தம் மற்றும் வேம்பு சாா்ந்த அங்கக பூச்சிக்கொல்லிகள் போன்ற இடுபொருள்கள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
அதோடு, விளைபொருள்களுக்கு அங்கக சான்றளிப்பு நடைமுறைகள் மூலம் மதிப்புக் கூட்டி விற்பனை செய்தல் தொடா்பான தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கப்படும். எனவே ஆா்வமுள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆா்வமுள்ள விவசாயிகள் நில உடைமை ஆவணம், ஆதாா் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை மையத்தை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.