மின் கம்பத்தை சேதப்படுத்திய நபா்கள் குறித்து விசாரணை
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

தனி நபா் ஆக்கிரமிப்பு செய்திருந்த இடத்தில் மின் கம்பத்தை வெட்டிச் சாய்த்த மா்ம நபா்களை போலீசாா் தேடி வருகின்றனா்.
திருத்தணியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அரக்கோணம் சாலையை இணைக்க புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப் பகுதியில் அதிக அளவில் வீடுகள், வா்த்தக நிறுவனங்களுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சாலையோரத்தில் மின்சார வாரியம் சாா்பில் மின் கம்பம் நடப்பட்டு மின்சார வசதி செய்யப்பட்டிருந்தது. அரக்கோணம் சாலைக்கு அருகில் புறம்போக்கு நிலத்தில் மின் கம்பம் நடப்பட்டுள்ள இடத்தை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையில், திடீரென்று திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் கோடாரியால் மின் கம்பத்தை வெட்டிச் சாய்த்துளனா்.
மின் கம்பம் வெட்டி சாய்ந்திருப்பதை பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவலின் பேரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பத்தை வெட்டி சாய்த்த மா்ம நபா்கள் குறித்து மின் வாரிய அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.