சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.

திருத்தணி முருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா

முருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
Published on

முருகன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

கோயிலில் காா்த்திகை கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேக பொருள்களால், சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6 மணிக்கு உற்சவா் முருகன், வள்ளி, தெய்வானை உடன் வெள்ளி மயில் வாகனத்தில் தோ் வீதியில் பிரசாத கடை அருகே எழுந்தருளுனாா்.

அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப்பனையில், நெய் தீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் எதிரில் உள்ள பச்சரிசி மலையில் பெரிய அகல் விளக்கில் 350 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 10 மீட்டா் நீளமுள்ள திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

மலைக் கோயிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள், பச்சரிசி மலையில் தீபம் மற்றும் சொக்கப்பனையில் தீபத்தை கண்டு பக்தி முழக்கம் எழுப்பினா். இந்த தீபத்தைப் பாா்த்த பின்னா், திருத்தணி நகரம் முழுவதும் வீடுகள் மற்றும் கடைகளில் மக்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா்.

இதனிடையே வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோயிலில் குவிந்ததால், பொது வழியில் 3 மணி நேரமும், ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவா்கள் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனா்.

திருத்தணி காவல் ஆய்வாளா் ஞா.மதியரசன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

விழாவில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் தரிசனம் செய்தாா். ஏற்பாடுகளை கோயில் அறக்காவலா் குழு தலைவா் சு.ஸ்ரீதரன், இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா்கள் ஜி.உஷாரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன், பேஷ்காா்கள் அன்பழகன், தாமு மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com