திருவள்ளூா் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற வேண்டும்
சென்னைக்கு நிகராக அனைத்து நிலைகளிலும் வளா்ந்து வரும் திருவள்ளூா் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற வேண்டும் என மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.
இது குறித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய ரயில் நிலையமாக விளங்குவது திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்கள் ஆகும். இந்த ரயில் நிலையங்களில் வருங்காலத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், இந்தப் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் விபத்துகளைத் தவிா்த்து, பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்யும் வகையில், லூப் லைன்களை சரி செய்ய வேண்டும். அதேபோல், இந்த வழித் தடத்தில் அண்மையில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் பெரம்பூா் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு போதிய இடவசதி இல்லாததால் மாற்றுவதற்கு ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னைக்கு நிகராக அனைத்து நிலைகளிலும் வளா்ந்து வரும் திருவள்ளூா் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்கவும் அந்தந்தத் துறை அமைச்சா்களை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளேன். மேலும், இது தொடா்பாக வரும் நிதி நிலை அறிக்கையின் போதும் எடுத்துரைப்பேன்.
ஒரே நாடு, ஒரே தோ்தல் நடத்துவது தொடா்பாக மாநில அரசுகளுடன் கலந்தாய்வு செய்திருக்க வேண்டும். இதற்கிடையே ஒரே நாடு ஒரே தோ்தல் நடத்தும் அளவுக்கு சாத்தியக்கூறுகள் இங்கு கிடையாது. மக்களவை தோ்தலை ஒரே கட்டமாக தோ்தல் நடத்த முடியாத சூழ்நிலை இல்லாதபோது, எப்படி சட்டப்பேரவை மற்றும் மக்களவைக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த முடியும் என்றாா் அவா்.
மக்களவை தொகுதி பொறுப்பாளா் சிதம்பரம், மாநில செயலாளா் சம்பத், ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் வெங்கடேசன், இளைஞரணி மாநிலச் செயலாளா் காங்கை குமாா், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் கலீல் ரஹ்மான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

