திருவள்ளூா் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி மந்தம்: விரைந்து முடிக்க பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை
சு. பாண்டியன்
திருவள்ளூரில் ரூ.33 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் கடந்த ஒராண்டுக்கு மேலாகியும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. பணியை விரைந்து முடிக்க பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்தனா்.
சென்னைக்கு மிக அருகில் உள்ள நகரம் என்றால் அது திருவள்ளூா்தான். மாவட்டத் தலைநகராக உருவாகி 30 ஆண்டுகள் ஆகிறது. சென்னை - திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழியில் திருவள்ளூா் உள்ளதால், இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கா்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு இடங்களுக்கு 250-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூா் நகராட்சிப் பேருந்து நிலையம் ராஜாஜி சாலையில், அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில், செயல்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில், 10 பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். மேலும், இப்பேருந்து நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழியும் மிகவும் குறுகலாக உள்ளதால், பேருந்துகள் வந்து செல்வதில், கடும் சிரமம் உள்ளது. போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
15 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டம்: இந்த நிலையில் திருவள்ளூா் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆா். அருகில் உள்ள வேடங்கிநல்லுாரில் 5 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடா்ந்து பேருந்து நிலையக் கட்டுமானப் பணி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது.
அப்போது, 15 மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், இதுவரை பணிகளை முடிக்க எவ்விதமான துரித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.
மந்தகதியில் பணிகள்: பணிகள் தொடங்கி 11 மாதங்களான நிலையில் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்ட காலம் முடிய இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்கிடையே நிகழாண்டிற்குள் பணிகள் முடிக்க முடியாத நிலையில் உள்ளது.
இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், பேருந்து நிலையம் அனைத்து நவீன வசதிகளிடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் ஒரே நேரத்தில் புகா் பேருந்துகள்- 45, நகரப் பேருந்துகள்- 11 என மொத்தம் 56 பேருந்துகள் இயக்க முடியும். அந்த வகையில் 5,889 ச.மீ. பரப்பளவில் பேருந்து நிலையம் அமைகிறது.
தரைதளம் மற்றும் முதல்தளம் என 2,493 ச.மீ. பரப்பளவில் பிரதான கட்டடம் அமைய உள்ளது மேலும், 107 கடைகள், 550 இரு சக்கர வாகனங்கள், 16 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் அமைகிறது.
புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை வலியுறுத்தியுள்ளோம். நிகழாண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றாா்.

