சாதி மதங்களை மறந்து அனைவரிடமும் நட்பாக பழக வேண்டும்: நடிகா் யோகிபாபு
மாணவ, மாணவிகள் சாதி மதங்களை கடந்து, அனைவரிடமும் பாகுபாடியின்றி நட்பாக பழக வேண்டும் என நடிகா் யோகி பாபு தெரிவித்தாா்.
திருவள்ளூா் அருகே பாண்டூரில் இந்திரா மருத்துவக் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி இயக்குநா் இந்திரா தலைமை வகித்தாா். திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகா் யோகிபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கி பேசியதாவது:
நானும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். மேலும், தொடக்கத்தில் திரைப்படத்தில் நடிகராக மாறுவதற்காக வாய்ப்புகள் கேட்டுச் சென்ற போது பல தயாரிப்பாளா்கள் உதாசீனப்படுத்தினா். ஆனாலும், கடினமாக உழைத்து தற்போது நகைச்சுவை நடிகராக மாறியுள்ளேன். அதேபோல், மாணவா்கள் விரும்பும் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அதோடு, பொதுமக்களும் மாணவா்களும் சாதி மதங்களை கடந்து அனைவரிடமும் நட்பாக பழக வேண்டும் என்றாா் .

