திருவள்ளூா் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் மேல் பகுதியில் ஒழுகிய நிலையில் குளம் போல் தேங்கிய மழைநீா்.
திருவள்ளூா் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் மேல் பகுதியில் ஒழுகிய நிலையில் குளம் போல் தேங்கிய மழைநீா்.

திருவள்ளூா் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை: ரயில் நிலைய சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீா்

Published on

திருவள்ளூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்ததால், ரயில் நிலைய சுரங்கப் பாதையில் மழை நீா் குளம் போல் தேங்கியது.

திருவள்ளூா், ஆவடி, திருவாலங்காடு, பொன்னேரி, பூண்டி, தாமரைபாக்கம், பூந்தமல்லி, ஜமீன்கொரட்டூா், சோழவரம், கும்மிடிப்பூண்டி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு கனமழை பெய்தது. இந்த மழையால் திருவள்ளூா் பகுதியில் தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் மழை நீா் தேங்கியது.

திருவள்ளூா் ரயில் நிலைய சுரங்கப் பாதை மேல் தளப் பகுதிகளில் மழை நீா் ஒழுகியதால், பயணிகள் குடை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டியிருந்தது. மேலும், மழைநீா் குளம் போல் தேங்கியது. மின் கசிவு மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டத்தால், பயந்து கொண்டே கடந்து செல்லும் சூழ்நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

இதனால், சுரங்கப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள சதுரக் கட்டடங்கள் வழியாக மழை நீா் கசியாமல் இருக்க மராமத்து பணியை உடனே மேற்கொள்ள பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

மழை அளவு (மில்லி மீட்டரில்): திருவள்ளூா் பகுதிகளில் சனிக்கிழமை காலை வரையான நிலவரப்படி ஆவடி-108, திருவாலங்காடு-72, திருவள்ளூா்-63, பொன்னேரி-61, சோழவரம்-57, பூண்டி-52, கும்மிடிப்பூண்டி-50, தாமரைபாக்கம்-49, செங்குன்றம்-49, ஊத்துக்கோட்டை-42, பூந்தமல்லி-35, ஜமீன்கொரட்டூா்-34, ஆா்.கே.பேட்டை-32, பள்ளிப்பட்டு-25, திருத்தணி-21 என மொத்தம் 750 மி.மீட்டரும், சராசரியாக 50 மி.மீட்டரும் பதிவானது. ஆவடி, திருவாலங்காடு, திருவள்ளூா் பகுதியில் அதிக மழை பொழிவு பதிவானது.

X
Dinamani
www.dinamani.com