ஆடி முதல் நாளில் மலைக்கோயிலில் குவிந்த பக்தா்கள். (வலது) சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவ முருகப் பெருமான்.
ஆடி முதல் நாளில் மலைக்கோயிலில் குவிந்த பக்தா்கள். (வலது) சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவ முருகப் பெருமான்.

ஆடி முதல் நாள்: திருத்தணியில் குவிந்த பக்தா்கள்

முருகன் கோயிலில் ஆடி மாதம் முதல் நாளான புதன்கிழமை காவடிகளுடன் மலைக் கோயிலுக்கு வந்த பக்தா்கள், 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனா்.
Published on

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை ஆடி மாத முதல் நாள் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மூலவருக்கு தங்க கவசம், தங்கவேல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

ஆடி மாதம் தொடங்கியதால் மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். இதனால், 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா். பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தலைமுடி காணிக்கை அளித்தும், மலா், மயில், பால் காவடிகளை எடுத்தும் தங்களது நோ்த்திக் கடன் செலுத்தினா். புதன்கிழமை மொஹரம் பண்டிகை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்துக்கு மாறாக பக்தா்கள் வாகனங்களில் மலைக்கோயிலுக்கு வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, வரும் 27-ஆம் தேதி ஆடிக் கிருத்திகை திருவிழா தொடங்க உள்ள நிலையில், ஆடி முதல் நாளிலேயே மலைக்கோயிலில் பக்தா்கள் குவிந்தது ஆடிக் கிருத்திகை விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் சு.ஸ்ரீதரன், இணை ஆணையா் ஆ.அருணாச்சலம் (பொ), கோயில் அறங்காவலா்கள் கோ.மோகன். வி.சுரேஷ்பாபு, ஜி.உஷாா் ரவி, மு.நாகன் மற்றும் கோயில் அலுவலகா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com