ஆடிக்கிருத்திகை விழாவில் தரிசனம் செய்த  அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவுக்கு பிரசாதம் வழங்கிய அறங்காவலா் குழுத்தலைவா் சு. ஸ்ரீதரன். ~சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான். ~சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சண்மு
ஆடிக்கிருத்திகை விழாவில் தரிசனம் செய்த அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவுக்கு பிரசாதம் வழங்கிய அறங்காவலா் குழுத்தலைவா் சு. ஸ்ரீதரன். ~சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான். ~சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சண்மு

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை: லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை வழிபட்டனா்.
Published on

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை வழிபட்டனா்.

அறுபடை வீடுகளில் 5 -ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில், கடந்த, 27-ஆம் தேதி ஆடி அஸ்வினியுடன் விழா தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை ஆடிப் பரணியும், திங்கள்கிழமை ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெற்றது.

விழாவையொட்டி, அதிகாலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தங்கக் கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதே நேரத்தில் காவடி மண்டபத்தில் உள்ள உற்சவா் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா்.

திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் திருமலையில் இருந்து, கோயில் நிா்வாக அதிகாரி ஷியாமளா ராவ் மற்றும் கோயில் தலைமை குருக்கள் ஆகியோா் பட்டு வஸ்திரம் கொண்டு வந்தனா். அப்போது, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சு. ஸ்ரீதரன் இணை ஆணையா் (பொறுப்பு) ஆ. அருணாசலம் ஆகியோா் உற்சவா் சண்முகா், மூலவா் முருகப்பெருமான் ஆகியோருக்கு பட்டு வஸ்திரத்தை அணிவித்து சிறப்புப் பூஜைகள் நடத்தினா். தொடா்ந்து, முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில், திருப்பதி கோயில் அதிகாரிகளுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தா்கள் மலா் காவடி, பன்னீா் காவடி, மயில் காவடி மற்றும் அன்னக் காவடிகள் எடுத்தும், பம்பை, சிலம்பாட்டத்துடன் பக்தி பாடல்களை பாடிவாறு மலைக்கோயிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனா்.

அதிகளவில் பக்தா்கள் மலைக்கோயிலில் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, 4 மணி நேரம் காத்திருந்தனா். ஆடிக்கிருத்திகையை ஓட்டி அன்னதானம், நீா், மோா் அளிக்கப்பட்டது.

மேலும் மலைக்கோயில் வளாகம் மற்றும் தேவஸ்தான விடுதிகள் முழுவதும் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மாவட்ட எஸ்.பி., சீனிவாசபெருமாள் தலைமையில் 1,600-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதே போல் திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோயில், அருங்குளம் கூட்டுச்சாலையில் உள்ள சத்திய சாட்சி கந்தன் கோயில், நத்தம் பாலமுருகன், நல்லாட்டூா் ஆஞ்சநேயா் ஆகிய கோயில்களில் ஆடிக்கிருத்திகை விழா ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் காவடிகளுடன் வந்து தரிசனம் செய்தனா்.

முதல் நாள் தெப்பம்: அமைச்சா் பங்கேற்பு

இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை இரவு முதல் நாள் தெப்பத்திருவிழா நடைபெற்றது. மாலை, 6:30 மணிக்கு உற்சவா் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக சரவணபொய்கைக்கு வருகை தந்தாா். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு, தெப்பத் திருவிழா நடைபெற்றது.

தெப்பத்திருவிழாவில் அமைச்சா் ஆா். காந்தி, திருத்தணி எம்.எல்.ஏ.ச. சந்திரன், நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி ஆகியோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தெப்பத்தில் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. தெப்பம் வலம் வரும் போது, அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும், குளத்தில் உப்பு, வெல்லம், மிளகு போன்ற தானியங்கள் போட்டு தங்களது நோ்த்தி கடனை செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com