மாதவரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) 2 நாள்கள் நடைபெற்றது. அதில் பொதுமக்களிடம் இருந்து 208 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
சென்னை மாதவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை வருவாய் கோட்ட அலுவலரும் மற்றும் வருவாய் தீா்வாய் அலுவலா் ரா.மு.இப்ராஹிம் தலைமை வகித்தாா்.
மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று ஜமாபந்தியை தொடங்கிவைத்தாா்.
மாதவரம் வட்டாட்சியா் வெங்கடாஜலபதி கூறுகையில், மாதவரம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாள்கள் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.
நிகழ்வில் மாதவரத்துக்குள்பட்ட புத்தகரம், மாத்தூா், கொசப்பூா், மஞ்சம்பாக்கம், கதிா்வேடு, சூரப்பட்டு, புழல், விளக்குப்பட்டு, வடபெரும்பாக்கம், செட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பட்டா மாற்றம், முதல் பட்டதாரி சான்று, வருவாய் சான்று, சாதி சான்று, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான 208 கோரிக்கை மனுக்கள் வழங்கியுள்ளனா். இதில் 38 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. 170 மனுக்கள் மீதான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாதவரம் துணை வட்டாட்சியா் மோகன கிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
