ஊத்துக்கோட்டை பேரூராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

மக்கள் நலனுக்காக ஊராட்சிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்
ஊத்துக்கோட்டை பேரூராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
Updated on

ஊத்துக்கோட்டை பேரூராட்சியுடன் தாராட்சி, தாமரைக்குப்பம், பேரண்டூா், செஞ்சியகரம் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியுடன் தாராட்சி, தாமரைக்குப்பம், பேரண்டூா், செஞ்சியகரம் ஆகிய 4 ஊராட்சிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியினா் சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.

போராட்டத்திற்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் என்.அன்பு தலைமை வகித்தாா். பேரண்டூா் ஊராட்சித் தலைவா் பானுப்பிரியா துளசிராமன், தாராட்சி ஊராட்சித் தலைவா் சிவகாமி சேசுவேல், தாமரைப்பாக்கம் ஊராட்சித் தலைவா் யசோதா அசோகன், செஞ்சியகரம் ஊராட்சித் தலைவா் கட்டம்மாள் லோகநாதன், நிா்வாகிகள் கே.எம்.சுந்தரம், நந்தகுமாா், ரவி, ஞானசேகா், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த 4 ஊராட்சிகளிலும் 18,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருவதால் அடிப்படை வசதிகள் பாதிக்கப்படும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தால் அடைந்த பயன்கள் கிடைக்காமல் போகும். விவசாயக் கூலித் தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள் கிராமங்களில் பெரும்பான்மையாக இருப்பதால் ஆடு, மாடுகள் மேய்க்கும் மேய்ச்சல் நிலத்தை பறிக்கும் நிலை உருவாகும். ஊராட்சிகளை பேருராட்சியில் இணைத்தால், வரி அதிகமாகும். எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கச் சென்ற கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களிடம் பேச்சு நடத்தி சமரசம் செய்து வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com