ஆவடி அருகே தனியார் நிறுவனத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 4 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோயம்புத்தூர், விளாங்குறிச்சி, சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனிஷ் சேவியர் ஆனந்தன் (54). கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபரில் இவர் ஆவடி அருகே காவல்சேரி பகுதியில் 7,000 சதுரடியில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள இயந்திர தளவாடங்களோடு அட்டை தயாரிக்கும் நிறுவனத்தை ஏற்படுத்தி உள்ளார். இதை இவரது நண்பர் சென்னை , நொளம்பூரைச் சேர்ந்த முத்துராஜிடம் ஒப்படைத்து நிறுவனத்தை நடத்தக் கூறியுள்ளார். மேலும், நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம், மின்சாரக் கட்டணம் போக மாதம் ரூ. 25,000 தர வேண்டும் என ஒப்பந்தம் போடாமல் தனிஷ் சேவியர் ஆனந்தன் வாய்மொழியாக கூற, முத்துராஜ் ஒப்புக்கொண்டாராம்.
பின்னர் 2022- முதல் முத்துராஜ் மாதம் ரூ. 25,000 பணத்தை தனிஷ் சேவியர் ஆனந்தனிடம் கொடுத்து வந்துள்ளார். இதன் பிறகு முத்துராஜ், தனது மனைவி முத்துலட்சுமி பெயரில் அதே நிறுவனத்தில், வேறு ஒரு நிறுவனத்தை நடத்தினாராம். இவர், மனைவி முத்துலட்சுமி, அவரது நண்பரான கார்த்திக் ஆகியோர் சேர்ந்து நிறுவனத்துக்கு போலியாக வாடகை ஒப்பந்த பத்திரம், வாடகை ரசீது, தடையில்லா சான்று இயந்திரம் வாங்கியதாக போலி ஆவணங்களை உருவாக்கி தனிஷ் சேவியர் ஆனந்தனின் கையொப்பத்தை போலியாக போட்டு ஆவணங்களை தயாரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பிறகு 2021-ஆம் ஆண்டு நம்பவர் மாதம் பூந்தமல்லியில் முத்துலட்சுமி பெயரில் ஜிஎஸ்டி ரசீது பெற்று கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு வங்கியில் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடன் வாங்கியுள்ளனர். மேலும், தனிஷ் சேவியர் ஆனந்தனுக்கு சொந்தமான இயந்திரங்களை வைத்து திருவள்ளூரில் அரசு மானியம் பெற்றுள்ளனர். 2023-ஆம் ஆண்டு தனிஷ் சேவியர் ஆனந்தன் வரவு, செலவு கணக்கு பார்க்க வந்தபோது, அவருக்கு தர வேண்டிய வருமானத்தை தராமல் ஏமாற்றி ரூ. 4 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து தனிஷ் சேவியர் ஆனந்தன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். காவல் ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை, ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போலி ஆவண தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து, தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கீழ்ப்பாக்கம், வங்கி தெருவைச் சேர்ந்த முத்துராஜ் (46), நொளம்பூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த முத்துலட்சுமி (40), மதுரவாயல் தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த கார்த்திக் (39) ஆகிய மூவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.