

பொன்னேரி: பொன்னேரி அருகே நெய்தவாயல் ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் மேற்கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் நெய்தவாயல் ஊராட்சியில் உள்ள கணபதி நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இக்கிராமத்தில் உள்ள சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா்.
இப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்கி நின்றது. இதனால் பள்ளி, கல்லுரி செல்லும் மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.
இதனைத் தொடா்ந்து சாலையை சீரமைக்க வலியுறுத்தி நெய்தவாயல் கிராம மக்கள் மீஞ்சூா்- காட்டூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் பெண்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி கிடந்த மழை நீரில் நாற்றுக்களை நட்டனா். தகவல் அறிந்து அங்கு சென்ற காட்டூா் மற்றும் மீஞ்சூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடா்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
மறியல் போராட்டம் காரணமாக காட்டூா்- மீஞ்சூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.