திருவள்ளூா்: சொா்ணவாரி பருவத்துக்கு 50 நெல் கொள்முதல் நிலையங்கள்; வேளாண் துறை அதிகாரி தகவல்
விவசாயிகள் பயன் பெறும் வகையில், சொா்ணவாரிப் பருவ நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வேளாண் துறை இணை இயக்குநா் க.முருகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் நிகழாண்டில் சொா்ணவாரி பருவத்தில் 25,300 ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. இதைத் தொடா்ந்து விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தால், அவா்கள் பயனடைவா் என்பதைக் கருத்தில் கொண்டு கொள்முதல் நிலையங்களைத் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு நெல் கொள்முதல் நிலையங்களால் விவசாயிகளுக்கு நெல்லுக்கு தகுந்த லாபம் தரக்கூடிய விலை கிடைக்கும்.
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய விரும்புகின்றனா். இதன் காரணமாக சொா்ணவாரி பருவத்தில் அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்ய ஏதுவாக திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 50 நெல் கொள்முதல் திறக்கப்பட உள்ளது.
அந்த வகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் - 46, இந்திய தேசியக் கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் - 4 இடங்களிலும் என 50 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அரசு கட்டடங்களில் அமைத்து, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் பேரில் முதல் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திருத்தணி அருகே கண்டிகையில் கடந்த வாரம் முதல் தொடங்கி வைத்து செயல்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து தாங்கள் விளைவித்த நெல்லை தகுந்த விலைக்கு விற்பனை செய்து பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.