திருவள்ளூா்: மிக்ஜம் புயலால் பாதித்த குறு, சிறு, நடுத்தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கு கடனுதவிக்கான சிறப்பு முகாம்

மிக்ஜம் புயலால் பாதித்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கான கடனுதவிக்கான சிறப்பு முகாம் வரும் 10-ஆம் தேதி தொடங்கி உள்ளது.
Published on
Updated on
1 min read


திருவள்ளூா்: மிக்ஜம் புயலால் பாதித்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கான கடனுதவிக்கான சிறப்பு முகாம் வரும் 10-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 12- ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட தொழில் மைய மேலாளா் சேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் அண்மையில் பெருமழை மற்றும் மிக்ஜம் புயல் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதைக் கருத்தில்கொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கான நிதி உதவி தமிழக அரசின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சாா்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் குறைந்தபட்சம் ரூ. 1 லட்சமும், அதிகபட்சம் ரூ. 3 லட்சமும் நிதி உதவி 6 சதவீத வட்டியில் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் நிதியுதவி பெற நிறுவனங்கள் குறிப்பிட்ட தகுதி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், 30-09-2023-அன்று நிறுவனம் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும். கடந்த 1-4-2023 முதல் 30-9-2023 வரையிலான அரையாண்டு வருமானத்தில், சான்றிதழில் குறிப்பிட்டுள்ளபடி 20 சதவீதம் வரை கடனாகவும், அதிகபட்சம் ரூ. 3 லட்சம் வழங்கப்படும். இதில் முதல் 3 மாதங்கள் வட்டி மட்டும் செலுத்த வேண்டும். அதையடுத்து, 4-ஆவது மாதம் முதல் 21-ஆவது மாதம் வரை (18 மாதங்கள்) மாதந்தோறும் அசல் தவணையுடன் சோ்த்து, வட்டி செலுத்த வேண்டும். மேலும், புயல் வெள்ளத்தால் பாதித்த உற்பத்தி, சேவைத் துறையிலுள்ள நிறுவனங்கள் வரும் 31-ஆம் தேதி வரை பயன்பெறலாம்.

எனவே திருவள்ளூா் மாவட்டத் தொழில் மையத்துடன் இணைந்து விழிப்புணா்வு முகாம், காக்களூரில் வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து, கும்மிடிப்பூண்டியில் விச்சூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா் சங்க அலுவலக கட்டடத்தில் 11-ஆம் தேதியும், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம், அட்கோ நகா் (முனீஸ்வரா் கோயில் எதிரில்) உள்ள கட்டடத்தில் 12-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு நிதியுதவி முகாமை, பாதித்த தொழில் முனைவோா், பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com