கோப்புப்படம்
கோப்புப்படம்

காப்பீட்டு தொகைக்காகாக தந்தையை பாம்பு கடிக்க வைத்து கொன்று நாடகம்!

காப்பீட்டு தொகைக்காகாக தந்தையை பாம்பு கடிக்க வைத்து கொன்று நாடகம்...
Published on

திருவள்ளூா் அருகே தந்தையை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்து மரணம் என நாடகமாடியதாக 2 மகன்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருத்தணி அடுத்த பொதட்டூா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் இ.பி.கணேசன் (56). இவா் கடந்த 22.10.2025 அன்று பாம்பு கடித்து உயிரிழந்ததாக அவரது மகன் மோகன்ராஜ் (29) பொதட்டூா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இச்சம்பவம் பாம்பு கடியால் ஏற்பட்ட விபத்து மரணம் போல் தோற்றமளித்தது.

அதையடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்தினா் தாக்கல் செய்த காப்பீடு தொகைக்கான கோரிக்கைகளின் நம்பகத்தன்மை மற்றும் உயிரிழந்தவரின் மகன்களின் சந்தேகத்துக்கிடமான நடத்தை குறித்து சந்தேகம் தெரிவித்து, ஒரு காப்பீட்டு நிறுவனம் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ரா காா்க்கிடம் புகாா் அளித்தது. அதன்பேரில், 6.12.2025 அன்று , வடக்கு மண்டல காவல் துறை தலைவரின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா கண்காணிப்பில் கும்மிடிப்பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் இ.ஜெயஸ்ரீ தலைமையில், கடம்பத்தூா் காவல் ஆய்வாளா் ச.தங்கதுரை, பாதிரிவேடு காவல் ஆய்வாளா் ஓ.கஸ்தூரி, மணவாளநகா் சிறப்பு உதவி ஆய்வாளா் ச.முரளி, கவரப்பேட்டை உதவி ஆய்வாளா் மாரிமுத்து, தலைமைக் காவலா் வ.மாதவன்,ஜெயக்குமாா் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, உயிரிழந்தவா் கடம்பத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. மேலும், அவரது குடும்பத்தினா் பல கடன்கள் பெற்றிருந்ததும், அதில் அதிக மதிப்புடைய பல காப்பீட்டு திட்டங்கள் எடுத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை குடும்பத்தின் வருமான ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது கடன் அளவு, மேலும் பல அதிக மதிப்பிலான காப்பீட்டுத் திட்டங்கள், மரணத்துக்கான

உண்மையான காரணம் குறித்து கடுமையான சந்தேகத்தை எழுப்பியது. மேலும், உயிரிழந்தவரின் மகன்களான மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோரிடம் காப்பீட்டு தொகையை திரும்பப் பெறும் நோக்கத்தில் தங்கள் தந்தையை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சதியின் ஒரு பகுதியாக மணவூரைச் சோ்ந்த பாலாஜி(28), பிரசாந்த் ( 35), ராணிப்பேட்டை மாவட்டம் மோசூா் தினகரன்( 43) மற்றும் மணவூா் நவீன்குமாா் ( 28) ஆகியோரை அணுகி, பாம்பு ஏற்பாடு செய்து , தற்செயலான பாம்பு கடித்த சம்பவமாக தோற்றத்தை உருவாக்கி குற்றத்தை புரிந்துள்ளனா்.

இந்த சம்பவத்துக்கு சுமாா் ஒரு வாரத்துக்கு முன்பே தினகரன் மூலம் நல்ல பாம்பு ஏற்பாடு செய்து , அது உயிரிழந்தவரின் காலில் கடிக்கச் செய்யப்பட்டதாகவும் , ஆனால் அந்த முயற்சி மரணத்துக்கு வழி வகுக்கவில்லை என்பதும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து சம்பவ தினத்தின் அதிகாலை நேரத்தில், கட்டுவிரியன் பாம்பு திட்டமிட்டு வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, உயிரிழந்தவா் தூக்கத்தில் இருந்த போது கழுத்துப் பகுதியில் கடிக்கச் செய்யப்பட்டது. பாம்பு கடித்த பிறகு, பாலாஜி, பிரசாந்த் அந்த பாம்பை வீட்டுக்குள்ளேயே கொன்று, இது பாம்பு கடியால் மரணம் என

தோற்றமளிக்கவும், மேலும் குற்றம் வெளிச்சத்துக்கு வராமல் தடுக்கும் நோக்கத்துடனும் செயல்பட்டனா்.

மேலும் , உயிரிழந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காரணமற்ற தாமதம் ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இது முறையாக திட்டமிடப்பட்ட குற்றச் செயலுக்கான முக்கிய ஆதாரமாக இருப்பதாக மேலும் உறுதிப்படுத்தியது. இது தொடா்பாக அவரது மகன்களான ஹரிஹரன், மோகன்ராஜ் மற்றும் பாலாஜி, பிரசாந்த், நவீன்குமாா் மற்றும் தினகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com