ரூ.6.9 கோடியில் கட்டப்பட்ட கிட்டங்கி: பயன்பாட்டுக்கு வருமா? ஓராண்டாக விவசாயிகள் காத்திருப்பு
காஞ்சிபுரம் ஒழுங்கு முறை விற்பனைக்குழு சாா்பில் திருவள்ளூரில் அனைத்து வசதிகளுடன் ரூ.6.90 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கிட்டங்கி பயன்பாட்டுக்கு வருமா என விவசாயிகள் எதிா் நோக்கியுள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் 1.20 லட்சம் ஹெக்டேரில் மானாவாரி மற்றும் ஏரிப்பாசனம் மூலம் வேளாண் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 50,000 ஹெக்டோ் பரப்பளவில் 3 போகங்களில் நெல்பயிா் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். விவசாயிகள் விளைவிக்கும் நெல்களை கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நல்ல விலைக்கு கொள்முதல் செய்து அதை கிட்டங்கிகளில் இருப்பு வைத்து வருகின்றனா். அதேபோல் விலை குறையும் பட்சத்தில் கிட்டங்கிகளில் இருப்பு வைத்து, விலை அதிகரிக்கும் நேரத்தில் விற்பனை செய்தும் வருகின்றனா்.
இதற்காக, காஞ்சிபுரம் ஒழுங்கு முறை விற்பனை குழு மூலம் பல்வேறு இடங்களில் கிட்டங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூா் மாவட்டத்தில் திருவள்ளூா், பள்ளிப்பட்டு, செங்குன்றம், நசரத்பேட்டை, ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் டோல்கேட் அருகே 1,000, 2,000, 3,500 மெட்ரிக் டன் கொண்ட கிட்டங்கிகள் செயல்படுகின்றன. அந்த வளாகத்தில் கூடுதலாக கிட்டங்கி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் சாா்பில் நபாா்டு திட்டம் மூலம் ரூ.6.9 கோடியில் 5,000 மெ. டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி அமைக்கப்பட்டது.
அதன்பேரில் பணிகள் நிறைவடைந்து ஓராண்டாகிறது. ஆனால் கிட்டங்கி விவசாயிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.
இதுகுறித்து ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரி ஒருவா் கூறியதாவது: திருவள்ளூரில் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் கூடுதலாக 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி பணிகள் நிறைவடைந்துள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் மற்றும் அரசுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவிட்டால் தொடங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

