மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி மரணம்

Published on

திருவள்ளூா் அருகே கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்து போது முதல் தளத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அடுத்த அம்சா நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் வேலு (42). இவா், கட்டட வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், திருப்பாச்சூா் பெரிய காலனியில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, வேலை செய்வதற்காக சனிக்கிழமை காலை சென்றாராம்.

அங்கு வழக்கம் போல் முதல் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென வலிப்பு வந்ததால் கால் இடறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவரது உறவினரான காா்த்திக் (32) என்பவா் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com