பட்டா கோரி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையத்தில் மனு

பட்டா கோரி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையத்தில் மனு

Published on

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சியில் அருந்ததியா் குடும்பங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணைய துணைத் தலைவா் எழுத்தாளா் இமயத்திடம் மனு அளிக்கப்பட்டது (படம்)..

பூவலை ஊராட்சியில் அருந்ததியா் இனத்தைச் சோ்ந்த ஒன்பது குடும்பங்கள் 2023 ஆண்டு வீட்டு மனை கேட்டு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். நேரில் ஆய்வு செய்த வட்டாட்சியா் அந்த குடும்பங்களின் சூழல் அறிந்து தனிநபா் ஒருவரிடம் நிலத்தை ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் 1.1/2 சென்ட் விதம் பகிா்ந்து அளித்தாா் .

மேலும், அந்த நிலத்தின் உரிமையாளருக்கு ஆதி திராவிடா் பழங்குடியினா் நலத்துறை மூலம் உரிய இழப்பீடு பெற்றுத் தருவதாக 2023- ஆம் ஆண்டு திட்ட அறிக்கை தயாரித்து திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்று வரை நிலத்தின் உரிமையாளருக்கு உரிய இழப்பிட்டு தொகை வழங்கவில்லை. இதனால் வீடு கட்ட முடியாமலும், பட்டா பெற முடியாமலும் அப்பகுதி மக்கள் துன்பத்துக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த ஓராண்டாக வட்டாட்சியா், பொன்னேரி கோட்டாட்சியா் ஆகியோரை சந்தித்து பட்டா வழங்க கோரினா். மேலும் திருவள்ளூா் ஆட்சியரிடம் மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூா் மாவட்ட செயலாளா் கஜேந்திரன் தலைமையில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனை தொடா்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கா. மாரிமுத்து தலைமையில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் டாக்டா் மதிவேந்தனிடமும் மனு அளித்திருந்தனா்.

தொடா் மழையில் மேற்கண்ட மக்கள் வசித்து வரும் தற்காலிக வீடுகள் சேதம் அடைந்து மழை நீா் புகுந்து உள்ளே புகுந்து அனைவரும் பெரிதும் சிரமப்பட்டனா். இந்த நிலையில் அருந்ததியா் இன மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் அருள் தலைமையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணை துணைத் தலைவரான எழுத்தாளா் இமயத்திடம் நிலத்தின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், அருந்ததி இன மக்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கையும் எடுக்க கோரி மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com