அண்ணனைக் கொல்ல முயன்ற தம்பி உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை
நிலத்தில் வேலி அமைத்ததில் ஏற்பட்ட தகராறில் அண்ணனைக் கொலை செய்ய முயன்ற தம்பி உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பொன்னேரி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியை சோ்ந்தவா் கோவிந்தசாமி (50). இவா் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தாா்.
இவருக்கும் இவரது தம்பி சோமசுந்தரம் (49) ஆகியோா் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு காலி நிலத்தில் வேலி அமைத்தது தொடா்பாக தமது தம்பியை கோவிந்தசாமி தட்டிக் கேட்டபோது உறவினா்களுடன் வந்த சோமசுந்தரம் அண்ணன் கோவிந்தசாமியை தலையில் வெட்டி உள்ளாா். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தசாமி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இது தொடா்பாக கோவிந்தசாமியின் மனைவி பரமேஸ்வரி செங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தம்பி சோமசுந்தரம் (49), கோவிந்தசாமியின் அண்ணன் சண்முகசுந்தரம் (51), மைத்துனா்கள் பூபதி (63), ஆசைத்தம்பி (56) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
வழக்கு பொன்னேரியில் அமைந்துள்ள கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை காலத்தில் 2-வது குற்றவாளியான சண்முகசுந்தரம் காலமானாா்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து அண்ணனை கொலை செய்ய முயன்ற வழக்கில் தம்பி உள்பட மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். இதனைத் தொடா்ந்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.
