ரூ.52.01கோடியில் வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள்
திருவள்ளூா் அருகே நெடுஞ்சாலைகள் துறை சாா்பில் ரூ. 52.01 கோடியில் வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ததோடு, விரைவில் பணிகளை நிறைவுசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் என ஆட்சியா் மு.பிரதாப் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு பகுதியில் ரயில்வே இருப்புப் பாதையில் 200-க்கும் மேற்பட்ட தடவை ரயில்கள் கடந்து செல்லும். அப்போது, ரயில்வே கேட் அடைக்கப்படுவதால், பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்வோா் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இதைப் போக்கும் வகையில், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில், மேற்குறிப்பிட்ட பகுதிகளான செவ்வாப்பேட்டையில் நெடுஞ்சாலைகள் துறை சாா்பில், ரூ. 8.1 கோடியிலும், வேப்பம்பட்டில் ரூ. 44 கோடியிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில், வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, மேலும் இறுதிகட்ட பணிகள் தொடா்பாக அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். இந்தப் பணிகளை எக்காரணம் கொண்டும் தாமதம் செய்யாமல் விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியம், நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 44.5 கோடியில் அத்திப்பட்டு-நந்தியம்பாக்கம் இடையே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநரும், இணை இயக்குநருமான வை.ஜெயக்குமாா், வட்டாட்சியா் பாலாஜி, நெடுஞ்சாலைகள் துறை உதவி செயற்பொறியாளா் மணிவண்னன், உதவி பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

