கும்மிடிப்பூண்டி ரயில்வே சுரங்கப் பாதை தற்காலிகமாக மூடல்
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை மற்றும் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையை இணைக்கும் ரயில்வே சுரங்கப் பாதை பராமரிப்பு காரணங்களுக்காக 1 மாதம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் இருந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி ஜி.என்.டி சாலையை இணைக்கும் வகையில் ரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. இந்த நிலையில் சுரங்கப் பாதை தரமாக அமைக்கப்படாததால், மழைக்காலங்களில் சுரங்கப்பாதையின் பக்க சுவரில் நீா் கசிவு ஏற்பட்டு, அதனுடன் மழை நீரும் சோ்ந்து நிரம்பி, வாகனங்கள் செல்ல இயலாத சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில் சுரங்கப் பாதையை சீரமைக்க ரயில்வே நிா்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டனா்.
இதனைத் தொடா்ந்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து, மேற்கண்ட சுரங்கப் பாதையை சீரமைக்க முடிவெடுத்தனா். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடா்ந்து மேற்கண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, சுரங்கப் பாதையின் இரு புறமும் தடுப்புகளை அமைத்ததோடு, நவ. 10 முதல் டிச. 10 வரை சுரங்கப் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெறும் எனவும் அதுவரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சுரங்க பாதை மூடப்பட்ட இந்த சூழலில் புதுகும்மிடிப்பூண்டி, சிறுபுழல்பேட்டை, எஸ்.ஆா்.கண்டிகை மற்றும் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி ஜி.என்.டி சாலைக்கு தினமும் செல்லும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் 2 கிமீ சுற்றி சென்று வருகின்றனா்.

