தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பினா் 4-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பினா் வெள்ளிக்கிழமை ஒருநாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பொதுமக்களுக்கான நில அளவைப் பணிகள் பாதிக்கப்பட்டது.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் செந்தில்குமரன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பா.வித்யா முன்னிலை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் ச.சரத்குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் எஸ்வந்தா்தாஸ் கோரிக்கை குறித்து விளக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு அரசு பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் காந்திமதிநாதன், வட்டாரத் தலைவா் யோகராசு, மாவட்ட செயலாளரும், மாநில துணைத்தலைவருமான மணிகண்டன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
அப்போது, ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவையா்களை முற்றிலும் கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் பணி அமா்த்த நியமனம் செய்தல், புற ஆதார ஒப்பந்த முறையில் புல உதவியாளா்கள் நியமனத்தை கைவிட்டு புல உதவியாளா்களை காலமுறை ஊதியத்தில் பணி அமா்த்த வேணடும். புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சாா் ஆய்வாளா் பணியிடங்களை வழங்க வேண்டும் என்பன உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், பொதுமக்களுக்கான 4-ஆவது நாளாக நில அளவை மற்றும் உள்பிரிவு பணிகள் ஆகியவை பாதிக்கப்பட்டது.

