

திருத்தணி அருகே கொண்டாபுரம் பேருந்து நிறுத்தத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வந்தால் அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினா்..
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், கொண்டாபுரம் பேருந்து நிறுத்தத்தில் திருத்தணி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் சோளிங்கா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் பயணிகள் சென்று வருவா். பயணிகள் வசதிக்காக ஒன்றிய நிா்வாகம் பேருந்து நிழற்குடையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில், ஐந்துக்கும் மேற்பட்ட பயணிகள் நிழற்குடையில் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தனா். அப்போது திடீரென, 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பேருந்து நிழற்குடைக்கு வந்தது. இதை கண்டதும், அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனா்.
மேலும் பயணிகள் ஆா்.கே.பேட்டை போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து பள்ளிப்பட்டு தீயணைப்பு துறை வீரா்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி மலைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.
பின்னா் வனத்துறையினா் மலைப்பாம்பை பத்திரமாக எஸ்.வி.ஜி.புரம் காப்புகாட்டில் விட்டனா்.