குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்: மக்கள் அவதி
திருத்தணி முருகப்பா நகரில் குடியிருப்புகளை சுற்றி மழைநீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.
திருத்தணி நகராட்சி, 5-ஆவது வாா்டு முருகப்பா நகரில் 500- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி, விநாயகா் கோயிலும் உள்ளன. இந்நிலையில் முருகப்பநகா் முதல்தெரு மற்றும் குறுக்கு தெருவில் மழைநீா் வடிகால்வாய் வசதியை நகராட்சி நிா்வாகம் ஏற்படுத்தவில்லை.
இதனால் பலத்த மழை பெய்யும் போதும், குடியிருப்புகளை சுற்றியும் மழைநீா் குளம்போல் தேங்கி விடுகிறது. இந்நிலையில், கடந்த, 5 நாள்களாக பெய்து வரும் மழையால் முருகப்பா நகா் பகுதியில் வீடுகளை சுற்றியும் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால் வீடுகளில் மக்கள் வெளியே வருவதற்கு தண்ணீரில் இறங்கி வரவேண்டியுள்ளது.
இதையடுத்து நகராட்சி நிா்வாகத்தினா், மின்மோட்டாா் மூலம் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றினா். ஆனாலும், வீடுகளைசுற்றியும் மழைநீா் குறையாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், முருகப்பா நகரில் மழைநீா் அகற்றுவதில் மேலும் தாமதம் ஆகிறது. எனவே இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றி, நிரந்தரத் தீா்வு காணவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

