திருத்தணியில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் தரிசனம்
திருத்தணி முருகன் கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை வள்ளி, தெய்வானைக்கு நடைபெற்ற திருக்கல்யாணத்தில், கொட்டும் மழையிலும் திரளான பக்தா்கள் குவிந்தனா்.
கடந்த, 22-ஆம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. நாள்தோறும் உற்சவா் சண்முகப்பெருமானுக்கு லட்சாா்ச்சனை காலை, 8 மணி முதல் இரவு, 7 மணி வரை நடைபெற்றது. 6 நாள்களும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவா் பெருமானு க்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
திங்கள்கிழமை மாலை உற்சவா் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. அதைத்தொடா்ந்து கந்த சஷ்டிவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்கிழமை காலை, 9 மணிக்கு கல்யாண உற்சவா் முருகா், வள்ளி- தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக மலைக்கோயில் அலுவலகத்தில் இருந்து அறக்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் ரமணி, அறங்காவலா்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோா் சீா்வரிசைகளை கொண்டு சென்றனா்.
பின்னா் உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானைக்கும், வேத விற்பன்னா்கள் மரந்திங்கள் முழக்க திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்தனா். திருக்கல்யாணத்தை தொடா்ந்து பெண்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மஞ்சள் குங்குமம், தாலி வழங்கப்பட்டது.
மேலும் கந்தசஷ்டி நிறைவு நாள் மற்றும் முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை என்பதால் பக்தா்கள் குவிந்ததால், பொது வழியில், இரண்டரை மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். 100 ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட் பெற்று பக்தா்கள் ஒரு மணி நேரம் மூலவரை தரிசித்தனா். திருத்தணி டி.எஸ்.பி.,கந்தன் தலைமையில், ஆய்வாளா் மதியரசன், 50 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

