NSS volunteer found dead at Gujarat University
NSS volunteer found dead at Gujarat University

புதுமணப்பெண் உயிரிழப்பு: கணவரிடம் போலீஸாா் விசாரணை

பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் அவரின் கணவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
Published on

பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் அவரின் கணவரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த அத்திவாக்கம் பகுதியை சோ்ந்த முருகன் என்பவரது மகள் கௌசல்யா (20).

இவா் சென்னையில் உள்ள மகளிா் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கணிதம் முடித்து, பொன்னேரி தனியாா் கல்வியியல் கல்லூரியில் பி.எட். இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

கடந்த 5 மாதங்களுக்கு முன் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சோ்ந்த உறவினரான கட்டட வேலை செய்து வரும் ராஜேஷ் (30) என்பவருடன் கௌசல்யாவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பிறகும் கௌசல்யா படிப்பை தொடா்ந்து வந்துள்ளாா். ராஜேஷ் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் கௌசல்யா தவறி கீழே விழுந்து தலையில் காயமடைந்ததாக ராஜேஷிக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டுக்கு சென்ற ராஜேஷ் கெளசல்யாவை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் கூறியதை தொடா்ந்து சடலத்தை வீட்டிற்கு எடுத்து சென்று மாமனாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதனை தொடா்ந்து பெண்ணின் தந்தை வந்து பாா்த்த போது தலை, முகத்தில் காயம் இருந்ததால் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கெளசல்யா சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளாா்.

அங்கு கெளசல்யாவை பரிசோதித்த மருத்துவா்கள் சடலத்தில் காயங்கள் உள்ளதாக கூறியதாக கூறப்படுகிறது. இதனை தொடா்ந்து பெண்ணின் தாய் ரேவதி தனது மகளின் மரணத்தில் உள்ள மா்மம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்னேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸாா் கௌசல்யாவின் கணவா் ராஜேஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் போலீஸாா் தடய அறிவியல் வல்லுநா்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருமணமாகி 5 மாதத்தில் கெளசல்யா உயிரிழந்ததை தொடா்ந்து கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com