திருவள்ளூா்: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.332 கோடியில் 602 கி.மீ. சாலைப் பணிகள்
திருவள்ளூா் மாவட்டத்தில் கிராமங்களில் இருக்கும் சாலைகளில் 4 ஆண்டுகளில் 602 கி.மீ. தூரம் ரூ. 332 கோடியில் சாலைப்பணி மேற்கொண்டுள்ளதாகவும், மேலும் முதல்வா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 38 கோடியில் 51 கி.மீ. தூரம் சாலைப் பணிகள் இன்னும் 2 மாதத்துக்குள் முடிப்படும் எனவும் ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இரண்டு நெடுஞ்சாலைகளுக்கு இடையே கிராம சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் அதிகமான வாகன போக்குவரத்துகளும் உள்ளன. இச்சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் 250 கி.மீ. தூரம் சாலை ஒப்படைத்து, அதில் 160 கி.மீ. நெடுஞ்சாலைத் துறை விரைவில் தொடங்கவும் உள்ளது. இது அனைத்தும் முக்கியமாக நகா்ப்புறத்தை ஒட்டி இருக்கும் ஊராட்சிகளான மோரை, வெள்ளானூா், சோழவரம் ஒன்றியம், வில்லிவாக்கம், பூந்தமல்லி ஒன்றியங்களில் இருக்கின்ற சாலைகளில் நிறைய சாலைகள் நகரத்தை ஒட்டி இருப்பதால் பெரிய, பெரிய சரக்கு லாரிகள் போகும். அதனால் அந்த சாலைகள் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்படைத்து உள்ளோம். அதுமட்டுமின்றி கிராமங்களில் இருக்கும் சாலைகளில் 4 ஆண்டுகளில் 602 கி.மீ. தூரம் ரூ. 332 கோடியில் சாலைப் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
இதில் முக்கியமான திட்டம், முதல்வா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 38 கோடி மதிப்பில் 51 கி.மீ. சாலைகளின் பணிகளும் 2 மாதத்துக்குள் முடிந்துவிடும். மேலும், ரூ. 124 கோடி மதிப்பில் 8 உயா்மட்ட மேம்பாலங்கள் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் நிறைவேற்றியுள்ளோம்.
அதேபோல், ரூ. 60 கோடி மதிப்பில் 3 பெரிய மேம்பாலங்களை திருவள்ளூா் மாவட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வா் அறிவித்தாா்.
தற்போதைய நிலையில் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேலும், 773 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் தொடங்கப்பட்டு, அதில் 718 பணிகள் நிறைவு செய்தும், கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து 35 புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வளா்ச்சி திட்டத்தில் நாற்றாங்கால் பண்ணைகள் ஊரக வளா்ச்சி துறை மற்றும் வனத் துறையின் மூலமாகவும் மரக்கன்றுகளை சாலையின் இருபுறங்களிலும் அமைத்து மாவட்டத்தை பசுமையாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.
