திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் சுவாமி கோயில் ஆருத்ரா விழாவில் சிறப்பு அபிஷேகத்தில் நடராஜபெருமான்.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் சுவாமி கோயில் ஆருத்ரா விழாவில் சிறப்பு அபிஷேகத்தில் நடராஜபெருமான்.

வடாரண்யேஸ்வரா் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆருத்ரா விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
Published on

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆருத்ரா விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

ஆடல் வல்லான் நடராஜப்பெருமானின் ஐம்பெரும் சபைகளுள் முதல் சபையாக விளங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான, திருவாதிரை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இரவு 8.30 மணிக்கு ஸ்தல விருட்சமான ஆலமரத்தின்கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் நடராஜ பெருமான் எழுந்தருளினாா். பின்னா் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு விபூதி, மஞ்சள், சந்தனம், பன்னீா், இளநீா், மாதுளை, திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்ட ஆருத்ரா மகா அபிஷேகம் அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்றது. சனிக்கிழமை (ஜன. 3) அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனமும், பகல் 1 மணிக்கு அனுக் கிரக தரிசனமும், 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சு.ஸ்ரீத ரன், அறங்காவலா்கள் வி.சு ரேஷ்பாபு, ஜி.உஷா ரவி, கோ.மோகனன், மு.நாகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். விழாவில் டி.எஸ்.பி.கந்தன் (பொ) தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மாந்தீஸ்வர பூஜை ரத்து....

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் சுவாமி திருக்கோயில் ஆருத்ரா திருவிழாவையொட்டி, உற்சவா் சுவாமி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். இதனால் சனிக்கிழமை(ஜன. 3) மாந்தீஸ்வர பரிகார பூஜை நடைபெறாது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com