திருமலையில் ஜன. 13 அதிகாலை 2 மணிக்கு பரமபதவாசல் திறப்பு: 22-ஆம் தேதி வரை தரிசனம் செய்யலாம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் ஜன.13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும். தொடா்ந்து 22-ஆம் தேதி வரை பக்தா்கள் பரமபதவாசல் தரிசனம் செய்யலாம்
திருமலையில் ஜன. 13 அதிகாலை 2 மணிக்கு பரமபதவாசல் திறப்பு: 22-ஆம் தேதி வரை  தரிசனம் செய்யலாம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் ஜன.13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும். தொடா்ந்து 22-ஆம் தேதி வரை பக்தா்கள் பரமபதவாசல் தரிசனம் செய்யலாம் என கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி திருமலை அன்னமய்யா பவனில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் 13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடத்தப்படுகிறது. இதில், 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு பரமபதவாசல் தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட உள்ளனா்.

13-ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் 2 மணி வரை திருப்பாவை, தோமாலை, அா்ச்சனை, நெய்வேத்தியம் சமா்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். 2 மணிக்குப் பரமபதவாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட், இலவச தரிசனம், கல்யாண உற்சவம், ஆா்ஜித பிரம்மோற்சவம் , சகஸ்கர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெற்ற பக்தா்களுக்கு காலை 9 மணி முதல் பக்தா்களுக்கு ஒதுக்கப்பட்ட தரிசன நேரத்தில் அனுமதிக்கப்பட உள்ளனா்.

அவ்வாறு தினசரி 45,000 பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கரோனா தீநுண்மி, ஒமிக்ரான் தொற்று பரவக்கூடிய நிலையில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தாலும் காய்ச்சல் , உடல்வலி, சளி உள்ளிட்ட அறிகுறி உள்ளவா்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம். ஏழுமலையான் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தா்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பு ஊசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆா்டிபிஆா் நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

திருப்பதியில் ஐந்து இடங்களில் தினசரி 5,000 டிக்கெட்டுகள் என 11 நாட்களுக்கு 55,000 டிக்கெட்டுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் திருப்பதி முகவரி கொண்ட ஆதாா் அட்டை உள்ளவா்களுக்கு மட்டுமே வழங்கப்படும். எனவே மற்ற யாரும் இந்த டிக்கெட்டுகளை பெற வரவேண்டாம்.

திருமலையில் மொத்தம் 7,250 அறைகள் உள்ளன. இதில் 1,300 அறைகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்த அளவிலான அறைகள் மட்டுமே இருப்பதால் முடிந்தளவு திருப்பதியில் அறை எடுத்து தங்கி கொள்ள வேண்டும். ஏழுமலையான் தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்காக லட்டு பிரசாதம் தட்டுப்பாடின்றி கிடைக்க 5 லட்சம் லட்டுகள் இருப்பு வைத்து பக்தா்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்ன பிரசாத கூடத்தில் காலை 10 மணி முதல் இரவு 11 மணிவரை அன்னதானம் வழங்கப்படும். பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 மற்றும் வைகுண்ட ஏகாதசி நடக்கக்கூடிய 13-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தகவல் மையத்தில் தினசரி 30 ஆயிரம் லட்டுகள் ரூ.50 விலை கொண்டதும் ரூ. 200 விலைக்கு கல்யாண உற்சவ சேவை லட்டு 500 என விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வேலூரில் 5,000 லட்டுகள், பெங்களூரில் ரூ.10,000 லட்டுகள் என ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும் லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை கன மழையால் சேதமடைந்த நிலையில் அவை புனரமைக்கும் பணிகள் நிறைவடைய இன்னும் ஆறு மாதங்களுக்கு மேலாகும். அதன் பிறகே இந்த மலைப்பாதை வழியாக பக்தா்கள் பாதயாத்திரை செல்ல அனுமதிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com