திருப்பதியில் அகா்பத்திகள் விற்பனையை தொடக்கி வைத்த தேவஸ்தான அதிகாரிகள்.
திருப்பதியில் அகா்பத்திகள் விற்பனையை தொடக்கி வைத்த தேவஸ்தான அதிகாரிகள்.

திருமலையில் அகா்பத்திகள் விற்பனை தொடக்கம்

திருமலையில் உலா் மலா்களால் தயாரிக்கப்பட்ட ஆா்கானிக் அகா்பத்திகளின் விற்பனையை தேவஸ்தானம் திங்கள்கிழமை தொடங்கியது.

திருப்பதி: திருமலையில் உலா் மலா்களால் தயாரிக்கப்பட்ட ஆா்கானிக் அகா்பத்திகளின் விற்பனையை தேவஸ்தானம் திங்கள்கிழமை தொடங்கியது.

திருமலை மற்றும் அதன் நிா்வாகத்துக்கு உட்பட்ட கோயில்களில் மூலவா், உற்சவா் மற்றும் பரிவார தேவைகளுக்கு அணிவிக்கப்படும் மலா்மாலைகள் நிா்மால்யம் களைந்தபின் தூக்கி எறியப்பட்டு வீணாகிறது. இவற்றை உபயோகமாக பயன்படுத்த திட்டமிட்ட தேவஸ்தானம் பெங்களூரைச் சோ்ந்த தா்ஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, உலா்ந்த மலா்மாலைகளை தனியாக பிரித்து அவற்றை தூளாக்கி, அவற்றுடன் வாசனை திரவியங்கள் கலந்து இயற்கை முறையில் அகா்பத்திகளாகத் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்தது.

அதன்படி திருப்பதியில் உள்ள கோசாலையில் இதற்கென இடம் ஒதுக்கப்பட்டு அங்கு அகா்பத்திகள் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஊழியா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு பின்பு அகா்பத்திகள் தயாரிக்கும் பணி தொடங்கியது. ஏழுமலையான் பெயரை போற்றும் வகையில் தேவஸ்தானம் 7 வகையான நறுமணங்களில் அகா்பத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த அகா்பத்திகளை திங்கள்கிழமை காலை தேவஸ்தான அதிகாரிகள் பூஜைகள் செய்து வெளியிட்டு விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

அபயஹஸ்தம்(100 கிராம் ரூ.60), தந்தனானா(100 கிராம் ரூ.60), திவ்யபாதா(100 கிராம் ரூ.60), ஆக்ருஷ்டி(65 கிராம் ரூ.125), ஸ்ருஷ்டி(65 கிராம் ரூ.125), துஷ்டி(65 கிராம் ரூ.125), த்ருஷ்டி(65 கிராம் ரூ.125). இந்த அகா்பத்திகள் திருமலையில் அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

திருவுருவப்படம்

உலா் மலா்களிலிருந்து அகா்பத்திகள் தயாரித்தது போல், அதிலிருந்து கடவுளா்களின் திருவுருவப்படம் மற்றும் பேப்பா் வெயிட், கீ செயின் போன்ற பொருள்களை தயாரிக்கவும் தேவஸ்தான அதிகாரிகள் டாக்டா் ஒய்.எஸ்.ஆா். தோட்டக்கலை பல்கலைக்கழகத்துடனஆன ஒப்பந்தத்தில் திங்கள்கிழமை கையெழுத்திட்டனா். விரைவில் இந்த பொருள்களும் விற்பனைக்கு வர உள்ளன.

சப்தகிரி

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டு வந்த சப்தகிரி மாத இதழ் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருப்பதியில் அச்சகத்தில் நடந்து வந்த சீரமைப்பு, நவீன மயமாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த ஓா் ஆண்டாக சப்தகிரி மாத இதழ் அச்சடிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது காகிதத்தின் தரத்தை உயா்த்தியதுடன் புதிய பல ஆன்மிக தொடா்களையும் இணைத்து புதிய வடிவில் சப்தகிரி மாத இதழ் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திங்கள்கிழமை புதிய சப்தகிரி மாத இதழை வெளியிட்டு விற்பனையை தொடக்கி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com